மாவூத்து மலைப்பகுதியில் நக்சலைட் நடமாட்டமா? அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை: மலைக்கிராம மக்களிடம் விசாரணை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மாவூத்து மலைப்பகுதியில் நக்சலைட் நடமாட்டம் உள்ளதா என அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ளதாக, உளவுத்துறை மூலம் அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நவீன ரக ஆயுதங்களுடன் நக்சலைட்கள், மாவூத்து உள்ளிட்ட மலைப்பகுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 29ம் தேதி முதல் வத்திராயிருப்பு நக்சல் தடுப்பு சிறப்பு அலுவலர் பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ், சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் 22 போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று மாவூத்து மலைப்பகுதியில் தேடும் பணி நடந்தது. மலையடிவாரத்தில் உள்ள மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர் வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, பிளவக்கல் அணை, கான்சாபுரம், நெடுங்குளம், சேதுநாராயணபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக யாரேனும் நடமாடுகின்றனரா? அப்படி வந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி, மலையடிவார கிராம மக்களிடம் அதிரடிப்படையினர் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். தேடுதல் வேட்டை ஒரு மாதம் வரை நடைபெறும் எனவும் தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கேரள பகுதிகளில் இருந்து யாரேனும் வனப்பகுதி வழியாக ஊடுருவி உள்ளனரா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: