மயிலாடுதுறையில் மழையில் நனைந்து வீணாகும் பருத்தி மூட்டைகள்: ஒழுங்குமுறை கூடத்தில் இடமில்லாததால் விவசாயிகள் வேதனை!!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இடவசதி இல்லாததால் 900 குவிண்டால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து, குறைந்த விலைக்கு ஏலம் போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய 4 தாலுக்காக்களில், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஒரு லட்சம் ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டது. இதனால், நல்ல விளைச்சல் கண்டதால், செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு, அதிகளவில் பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய இடவசதி இல்லாததால், அங்கு பெய்த மழை காரணமாக வைக்கப்பட்டுள்ள 900 குவிண்டால் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. மழையில் நனைந்த பருத்தி மூட்டைகளை அரசு கொள்முதல் செய்வதில்லை. இதனால், தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 4000 குவிண்டால் பருத்தி மூட்டைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கு 500 குவிண்டால் பருத்தி மூட்டைகள் மட்டுமே வைக்க இடமுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடப்பாண்டில் பருத்தி நல்ல விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகளவு பருத்தி மூட்டைகளை வைக்க போதிய இடவசதி செய்வதோடு மட்டுமல்லாமல்,  அரசே அனைத்து பருத்தி மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: