மயிலாடுதுறை அருகே அவசர கதியில் போடப்பட்ட வீரசோழன் ஆறு தடுப்புசுவர் சரிந்து சேதம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரும்பாக்கம் வீர சோழன் ஆற்றில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர் சரிந்து சேதமடைந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை பகுதியை வந்தடைந்தது. காவிரியிலிருந்து வீரசோழன் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் அரும்பாக்கம் பகுதிக்கு வந்து சேர்ந்தது. வீரசோழனாற்றில் குடிமராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறையினர் அவசர கதியில் செய்து முடித்தனர். இதில், அரும்பாக்கம் பகுதியில் ₹5.50 கோடி மதிப்பீட்டில் வீரசோழன் ஆற்றில் பல்வேறு வேலைகள் நடைபெற்றது.

இந்நிலையில் வீரசோழனாற்றிலிருந்து பாசனத்திற்காக குறும்பகுடிவாய்க்கால் சேந்தவராயன் வாய்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்கால்களில் தண்ணீர் சென்றதால் புதிதாக அமைக்கப்பட்ட கரை பாதுகாப்பு தடுப்புசுவர்கள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்றதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் துரைராஜ் கூறுகையில், வீரசோழனாற்றில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கரை பாதுகாப்பு சுவர் இடிந்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு திட்டமிட்டே தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளுக்கான நிதியை தண்ணீர் திறப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பு ஒதுக்கியுள்ளது. இதனால், அரசு ஒதுக்கிய ₹500 கோடி பணம் பாழாய்போகிறது. தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணி தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். முடிக்கப்படாத பணிகளுக்கு தொகையை வழங்கக்கூடாது. குறுவை மற்றும் சம்பா விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானால் மேட்டூரிலிருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படவேண்டும் என்றார்.

Related Stories: