அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிடிவாரண்ட்.: சர்வதேச காவல்துறை உதவியை நாடிய ஈரான் அரசு

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. டொனால்டு டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச காவல்துறை உதவ வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.  ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் நடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. இதற்கு பழிக்கு பழி வாங்குவோம் என ஈரான் கூறியிருந்தது.

இதனையடுத்து ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கும் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கத் துவங்கியது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப் படைகள் ஈராக்கில் முகாமிட்டன. அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட வீர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை அடுத்து எங்களுடைய நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என ஈராக் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஈராக்கின் அல் ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலுக்காக பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: