பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாத வாரச்சந்தை: கொரோனா பரவும் அபாயம்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில், விதி மீறி நேற்று வாரச்சந்தை நடந்தது. அங்கு, பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால், கொரோனா எளிதாக பரவும் வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் காய்கறி, பழங்கள், இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. இதனால், பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அங்கு, சமூக இடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல் ஒருவரை ஒருவர்  முட்டி மோதிக்கொண்டு பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டியதால், கொரோனா சமூக பரவலாக மாறும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் மாலா தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று சாலையோர கடைகளை உடனடியாக அகற்றினர். மேலும், சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடையை மீறி சாலையோரங்களில் கடைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்தனர். முழு ஊரடங்கின்போது, போதிய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இதனால், வியாபாரிகள் கடைகள் வைத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலும், வருவாய் துறையினர் நேரில் வந்து சமூக இடைவெளியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Stories: