வேலூர் மத்திய சிறையில் 27 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதம் வாபஸ்...! இளநீரைக் குடித்து முடித்து கொணடார் முருகன்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டதால் முருகனின் 27 நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற ஸ்ரீகரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ள தாய் மற்றும் லண்டனில் வசிக்கும் உறவினர்களுடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி முருகன் கடந்த 1-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படி முருகனிடம் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால், உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் கடந்த 27 நாட்களில் அவருக்கு 5 முறை குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்நிலையில், ஆண்கள் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் இன்று பிற்பகல் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதிக்கும் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், சிறை வளாகத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடவும் முருகனின் கணக்கில் உள்ள தொகையில் இருந்து அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட முருகன், இளநீரைக் குடித்து 27 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். கடந்த ஆண்டு முருகனின் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிறை நன்னடத்தை விதிகளின்படி அவருக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதில், சிறை வளாகத்தில் உள்ள கோயிலுக்குச் செல்லவும், பொருட்களை வாங்கிக்கொள்ளும் சலுகையும் ரத்து செய்யப்பட்டது. இந்தச் சலுகைகள் தற்போது முருகனுக்கு மீண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: