கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது: பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் ரேவ் ஜோஸப் மார் தோமாவின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வழியாக உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் பலர் கணித்திருந்தனர். அனால் ஊரடங்கு, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், மக்களின் ஒத்துழைப்பால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் நோய் கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.

இந்தியாவில், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்து விளங்குகிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வாழ்வியல் முறையை கொரோனா வைரஸ் மாற்றிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோவிட்-19 வைரஸ் உடலளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் முன்பை விட தற்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த அரசு மக்களுக்கான எந்த முடிவுகளையும் எடுக்கும்போதும், டெல்லியில் உள்ள வசதியான அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு எடுக்கவில்லை. மக்களிடம் இருந்து கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறோம். இந்த உற்சாகம்தான் ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிக்கணக்கு தேவை என்பதை செயல்படுத்த ஊக்கமாக இருந்தது. மக்களின் நம்பிக்கைகள், பாலினம், சாதி, மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துப் பார்த்து மத்திய அரசு செயல்படவில்லை. 130 கோடி மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்துச் செயல்படுகிறோம். அரசியலமைப்புச் சட்டம்தான் இந்த அரசை வழிநடத்தும் ஒளிவிளக்காகும் என கூறியுள்ளார்.

Related Stories: