மருத்துவ குணம் கொண்ட பிரண்டை கொடிகள்; வேரோடு பிடுங்கி ஊறுகாய் ஆலைக்கு அனுப்பி வைப்பு: தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

க.பரமத்தி: மருத்துவ குணமுடைய பிரண்டை கொடிகளை வேரோடு கொத்து கொத்தாக பிடுங்கி ஊறுகாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எடுத்து செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். க.பரமத்தி ஒன்றிய கிராமப்புறங்களில் வேலிகளில் அதிகமாக வளர கூடியவை பிரண்டை. இதில் சாதாரண பிரண்டை, சிகப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும் கொடியாக வளர்ந்து செல்ல கூடியது. மருத்துவ குணமிக்கது.

பொதுவாக மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் கிராமப்புற காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்கு பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரண பிரண்டையே கிராம புறங்களில் அதிகமாக வளர்ந்து கிடக்கின்றன. அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது எனவும், இதனை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். அத்தோடு உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்வதுடன் ஞாபகசக்தியை பெருக்கி, மூளை நரம்புகளை பலப்படுத்துவதுடன் எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வு பிடிப்பை போக்கும்.

வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் என கிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்கள் கூறுகின்றனர். அரிய வகை இந்த மூலிகை பிரண்டை கொடியினை வேரோடு கொத்து கொத்தாக பிடுங்கி ஊறுகாய் தயாரிப்பு நிறுவனங்களுக்காக விவசாயிகள் அனுமதியில்லாமல் ஒரு சிலர் எடுத்து வருகின்றனர். இதனால் தற்போது அரிய வகை மூலிகை பிரண்டை செடிகள் வேகமாக அழிந்து வருகிறது. எனவே மருத்துவக் குணமுடைய பிரண்டை கொடிகளை வேரோடு கொத்து கொத்தாக பிடுங்கி ஊறுகாய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எடுத்து செல்வதை தடுக்கவும், மீதமுள்ள செடிகளை காக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: