உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் 8,828 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு: ரயில்வே அறிவிப்பு!

டெல்லி: ரயில்வேயின் 160 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஊர்புற மக்களின் நலனுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இதன் ஒருபகுதியாக 6 மாநிலங்களிலும் ரயில்வேத்துறையில் 160 உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்களில் பணியாற்ற 8,828 புலம்பெயர் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும், 125 நாட்களுக்கு வேலை என்கிற கணக்கிற்கு மொத்தம் 8 லட்சத்து 67 ஆயிரத்து 675 மனித உழைப்பு நாட்கள் வேலை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, 1,888 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நீண்ட காலமாகவே வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் போதிய ஊதியமும் நிரந்தர வேலைவாய்ப்புகளும் இல்லாத சூழல் நிலவுகிறது. இதுபோன்ற நிலையில் கொரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், நிதி நெருக்கடியாலும் வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் 8,828 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: