இந்தியாவில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..!!

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பால் சீனாவில் இருந்து மூலப்பொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு தழுவிய ஊரடங்கால் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனையடுத்து இந்த இக்கட்டான சூழலில் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் உடல் காப்பு கவசங்களின் உற்பத்தி ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது. ஆனால் முதலீட்டை ஈர்ப்பதில் பல சவால்கள் இன்னும் உள்ளன.  ஏற்கனவே மேக் இன் இந்தியா திட்டம் அமலில் இருந்த போதிலும், அதனால் பெரிய அளவில் பலன் கிட்டாமல் உற்பத்தி துறை தேக்கத்திலேயே இருக்கிறது.

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் தொடங்கியது முதல் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க இந்தியா முயன்று வருகிறது. அதற்காக, பெரு நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் பல முதலீட்டாளர்களின் தேர்வாக வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளே உள்ளன. தென்கொரியாவின் போஸ்கோ என்ற ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளது.

அதன் காரணமாக இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கும் போதிலும், சுமார் 67 லட்சம் டன் அளவுக்கு ஸ்டீலை இறக்குமதி செய்து வருகிறது. நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை, அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகள், மந்தமான அரசு நிர்வாகம் போன்ற காரணங்கள் முதலீட்டுக்கு தடையாக நிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது,அற்புதமான உள்கட்டமைப்பு தேவை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: