மக்கள் பணம் சுருட்டப்படுவதை தடுக்க ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் மாநில, நகர கூட்டுறவு வங்கிகள்: மத்திய அமைச்சரவை அதிரடி

புதுடெல்லி: மக்களின் பணம் சுருட்டப்படுவதை தடுக்க, கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஆனால், இவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பிலோ, கட்டுப்பாட்டிலோ கிடையாது. மகாராஷ்டிராவில் செயல்படும் ‘பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி’யில் கடந்தாண்டு பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்தது. இதனால், பணத்தை இழந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், பல மாநில கூட்டுறவு வங்கிகள் ஆகியவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பேட்டி அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த பேட்டியில், ‘‘அரசின் இந்த முடிவால், மக்களின் முதலீட்டு பணத்துக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். இதற்கான அவசரச் சட்டம் விரைவில் வெளியிடப்படும்,’’ என்றார்.

குஷிநகருக்கு சர்வதேச ஏர்போர்ட் அந்தஸ்து

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது, முக்கிய புத்தமத தலமாக விளங்குகிறது. இதை சுற்றிலும் லும்பினி, ஷ்ரவாஸ்தி, கபிலவஸ்து போன்ற புத்தமத கோயில்கள் உள்ளன. இவற்றுக்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில், இந்த விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: