சோழவந்தானில் அவலம்: ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் விபத்து

சோழவந்தான்: சோழவந்தானில் முழுமை பெறாத பாலப்பணியால் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் மதுரை சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் முதல் ஆர்.எம்.எஸ் காலணி வரை 4 புதிய பாலங்கள் சில மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலங்களின் இரு புறமும், ஜல்லி கற்கள், தார்க்கலவையுடன் சாலை போடவேண்டும். ஆனால் பணிகள் முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இதை கிடப்பில் போட்டதால், சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்லும் போது தூசு படலமாகிறது.

மேலும் சாலையில் நடுவே பாலங்களின் இருபகுதியிலும் பள்ளம் உள்ளதை தார்க்கலவையால் மூடி சாலை போடாததால், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் அனு தினமும் விழுந்து காயமடைந்து வருகின்றனர். குறிப்பாக ஆர்.எம்.எஸ் காலனி  அருகே உள்ள பாலத்தில் அதிக ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்லும் போது புகை மண்டலமாகி விபத்து ஏற்படுகிறது. சாலையோரத்தில் மழை நீரால் ஏற்பட்ட பள்ளத்தை இலகுவான மணலால் பெயரளவிற்கு மூடியுள்ளதால் வாகனங்கள் ஓரத்தில் செல்லும் போது டயர் பதிந்து விபத்து ஏற்படக்கூடும்.

இதே பாலம் கட்டும் போது உரிய தடுப்புகள் வைக்காததால், டூவீலரில் வந்த திருமால்நத்தத்தைச் சேர்ந்த இளைஞர் பள்ளத்தினில் விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது. எனவே மீண்டும் இதுபோல் சம்பவம் நடப்பதை தவிர்க்க, உடனடியாக பாலத்தின் இருபுறமும் தார்க்கலவையுடன் கூடிய சாலை அமைக்குமாறு நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: