அமெரிக்க அதிபர் டிரம்ப் அலறல் தபால் ஓட்டு எனது வெற்றிக்கு மிகப் பெரிய ஆபத்தாகி விடும்

அட்லாண்டா: ‘தபால் ஓட்டு மூலம் அதிபர் தேர்தைல நடத்தினால், எனது வெற்றிக்கு  மிகப்பெரிய ஆபத்து வந்துவிடும்,’ என அதிபர் டிரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் களமிறங்குகிறார் இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடேன் போட்டியிடுகிறார். தற்போது, கொரோனா பீதி நிலவுவதால், தபால் ஓட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி உட்பட பலர் விரும்புகின்றனர். தபால் ஓட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார நிபுணர்களும் கூறுகின்றனர்.

ஆனால், தபால் ஓட்டு நடத்தினால் அதில் பல்வேறு தில்லுமுல்லு நடக்க வாய்ப்பிருப்பதாக அதிபர் டிரம்ப் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தபால் ஓட்டுக்கு  எதிரான வழக்குகளில் நாங்கள் தோற்றால், தேர்தலில் வெல்வது மிகுந்த ஆபத்தாகிவிடும். தபால் ஓட்டு மூலம் தேர்தல் நடப்பது ஜனநாயக கட்சிக்கு சாதகமாகி விடும். இதில்,  மிகப்பெரிய மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது,’’ என்றார். இதற்கிடையே, அடுத்த மாதம் 4ம் தேதி வழக்கம் போல் அமெரிக்க சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

கறுப்பின பெண் துணை அதிபர்?

அமெரிக்காவில் சமீபத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக ஏன் ஒரு கறுப்பின பெண் இருக்கக் கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடேன் ஏற்கனவே துணை அதிபராக பெண் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்துள்ளார். அந்த பெண் கறுப்பினத்தவராக இருக்க வேண்டுமென பலதரப்பிலும் குரல் கொடுக்கப்படுகிறது. எனவே, பிடேன் கறுப்பின பெண்ணை துணை அதிபர் பதவிக்கு முன்னிறுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

Related Stories: