கட்டிலில் டி-சர்ட் அணிந்தபடி படுத்துக்கிட்டே வாதாடிய வக்கீல்: உச்ச நீதிமன்ற நீதிபதி அதிர்ச்சி

புதுடெல்லி: வழக்கு விசாரணைக்கு டி-சர்ட்டுடன் கட்டிலில் படுத்தவாறு வக்கீல் ஆஜரானது உச்ச நீதிமன்ற நீதிபதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரியானாவின் ரேவாரியில் நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்கை, பீகாரின் ஜெகனாபாத் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் ஆஜரான வக்கீல் வீட்டில் டி-சர்ட்டுடன் கட்டிலில் படுத்தவாறு ஆஜரானார். இதை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி எஸ். ரவீந்திர பாட் கூறுகையில், ``காணொலி காட்சியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் போது வக்கீல்கள் குறைந்தபட்ச நீதிமன்ற கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். அருவெறுக்கத்தக்க நிலையில் ஆஜராக வேண்டாம். வீட்டில் தனிமையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்,’’ என்றார் கோபமாக. இதையடுத்து, அந்த வக்கீல் நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.

Related Stories: