ஆந்திராவில் இருந்து சென்னை-திருப்பதி வழியாக வந்த இ-பாஸ் இல்லாத வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்: சரக்கு வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை

சென்னை : ஆந்திராவில் இருந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை வழியாக இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும், சரக்கு ஏற்றி வரும் வாகன ஓட்டிகளை உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு அனுமதித்தனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை, 12 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டையில் உள்ள சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை சோதனைச்சாவடியில்   ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், நகரி மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து வரும் சரக்கு வாகனங்களை தவிர பைக், கார், ஜீப் போன்ற பெரும்பாலான வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் வருகின்றன.

இதனால்,  தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எஸ்.ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி இ-பாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பினர்.

இதேபோல், ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் உள்ள மற்றொரு சோதனைச்சாவடியில் ஆந்திர மாநில எல்லை  பகுதியான சத்தியவேடு, தடா, காளஹஸ்தி ஆகிய பகுதிகளில் இருந்து எந்த வாகனங்களையும் போலீசார்  அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

மேலும் ஆந்திர, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், அந்த வாகனங்களின் டிரைவர் மற்றும் கிளீனர்களுக்கு சுகாதார துறை சார்பில், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் சுகாதார பணியாளர்கள்  உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுப்புகிறார்கள்.

Related Stories: