ஜவுளிக்கடைக்காரர் மனைவி படத்தை மார்பிங் செய்து ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய டிக்-டாக் காதல் ஜோடி

குமாரபாளையம் : குமாரபாளையத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் மனைவியின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, இணையத்தில் வெளியிடாமலிருக்க ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய டிக்-டாக் காதல்ஜோடி பிடிபட்டது. இதில் பெண், 7 மாத கர்ப்பிணி என்பதால் போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் -சேலம் சாலையில் ஜவுளிக்கடை வைத்துள்ளவர் பரணிதரன்(40). இவரது ஜவுளிக்கடையில் ஷர்மிளா (20) என்ற பெண், ஓராண்டாக வேலை செய்துள்ளார். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபருக்கும், ஷர்மிளாவுக்கு இடையே டிக்-டாக் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, காதல் மலர்ந்தது. சில மாதங்களுக்கு முன், இருவரும் திருமணம் செய்து கொண்டு, தூத்துக்குடியில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் குமாரபாளையத்தில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் பரணிதரனை செல்போனில் தொடர்பு கொண்டு ஷர்மிளா மற்றும் சுரேஷ் பேசியுள்ளனர்.

அப்போது அவரது மனைவியின் படத்தை வெப்சைட்டில் இருந்து எடுத்துள்ளதாகவும், இதை ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டால், குடும்ப மானம் போகுமெனவும், இதை வெளியிடாமலிருக்க ₹40 லட்சம் கொடுக்க வேண்டுமென மிரட்டியுள்ளனர்.

இந்த மிரட்டல் ஆடியோவை தனது செல்போனில் பதிவு செய்த பரணிதரன், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், தூத்துக்குடி சென்று ஷர்மிளா, சுரேஷ் ஆகியோரை குமாரபாளையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையில்

ஆடம்பரமாக வாழவேண்டும் என ஆசைப்பட்ட ஷர்மிளா, குமாரபாளையத்தில் உள்ள மேலும் சில நகைக்கடை உரிமையாளர்களையும் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த குமாரபாளையம் போலீசார், சுரேசை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷர்மிளா 7 மாத கர்ப்பிணி என்பதால், அவரை ஜாமீனில் விடுவித்தனர். இவர்களுக்கு பின்னால் மோசடி கும்பல் உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: