இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு : மதுபானங்களை சேமித்து வைத்து கொள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் படையெடுப்பு!!

செங்கல்பட்டு : சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சென்னையை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நாளையிலிருந்து அத்தியாவசிய கடைகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கப்படும். வழக்கம்போல் டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் மூடப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில், முழு ஊரடங்கின் போது, அனைவரும் நடந்து சென்றுதான் பொருட்களை வாங்க வேண்டும் என்றும் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் வெளியில் சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே  மழைக் காலத்திற்கு தேவையான உணவை எறும்புகள் சேமித்து வைப்பது போன்று மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று சேமிக்கத் தொடங்கினர். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள மதுபான கடைகளுக்கு இன்று குடிமகன்கள் படையெடுத்தனர். பல கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்து இருந்து, மதுபானங்களை வாங்கிச் சென்றனர். மதுப்பிரியர்கள் துணிப்பைகளில் மது பாட்டில்களை வாங்கி நிரப்பிக் கொண்டு, பெற்ற குழந்தையை அரவணைத்து எடுத்துச் செல்வதை போன்று மதுபாட்டில்கள் வைக்கப்பட்ட பைகளை மார்போடும், வயிறோடும் வைத்து கட்டி அணைத்து கொண்டுச் சென்றனர். இதனால், சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி உள்ள பிற மாவட்ட டாஸ்மாக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக நேற்றும் இன்றும் அமோக மது விற்பனை நடைபெற்றது.

Related Stories: