கொரோனா பலி சதவீதம் அதிகரிப்பில் அடுத்த குஜராத் மாடல் அம்பலம்: பாஜ அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜ ஆளும் குஜராத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதை சுட்டிக் காட்டியுள்ள ராகுல் காந்தி, ‘அடுத்த குஜராத் மாடல் அம்பலமாகி உள்ளது,’ என்று விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா நோய் தொற்று தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘கோவிட் 19 உயிரிழப்பு எண்ணிக்கை: குஜராத் 6.25 சதவீதம், மகாராஷ்டிரா 3.73 சதவீதம், ராஜஸ்தான் 2.32 சதவீதம், பஞ்சாப் 2.17 சதவீதம், புதுச்சேரி 1.98 சதவீதம், ஜார்கண்ட் 0.5 சதவீதம், சட்டீஸ்கர் 0.35 சதவீதமாகும். ஆகவே, இதிலும் குஜராத் மாடல் அம்பலமாகி உள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டிலேயே அதிக நோய் தொற்றுள்ள மாநிலங்கள் வரிசையில் குஜராத் நான்காவது இடத்தில் உள்ளது, இங்கு, 24,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,505 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற ஊடக செய்தியையும் இணைத்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை காட்டிலும் பாஜ ஆளும் மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி உள்ளதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ‘குஜராத் மாடல்’     என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டது. மோடியின் ஆட்சி காலத்தில் குஜராத் வளர்ச்சி அடைந்ததால், இந்தியாவும் வளர்ச்சி அடையும் என்பதை குறிக்கும் வகையில் பாஜ.வினரால், ‘குஜராத் மாடல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதைத்தான், கொரோனா பாதிப்பு விவகாரத்தில் ராகுல் பயன்படுத்தி இருக்கிறார்.

Related Stories: