அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் பாதிப்பு தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: கொரோனாவை முன்கூட்டியே கண்டுபிடிப்பதால் விரைந்து குணப்படுத்த முடிகிறது. இதுவரை 27 ஆயிரம் பேரை குணப்படுத்தி உள்ளோம்.  இறப்பை தடுக்க நோயை கண்டுபிடிக்க வேண்டும். நோயை கண்டுபிடிக்க அதிக பரிசோதனை செய்ய வேண்டும். இதன்படி தமிழகத்தில் நேற்று 18,403 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதிக சோதனை செய்த காரணத்தால்தான் அதிக பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது. எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை. எல்லா தகவலையும் அரசு வெளிப்படையாக அறிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை தேடி பிடிக்கிறோம். 80 லட்சம் பேர் மக்கள் வசிக்கும் சென்னையில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சோதனை ெசய்த காரணத்தால் தான் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 17 ஆயிரம் படுக்கைகள், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் படுக்கைகள்,  தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதி தொடர்பான தகவல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டம் மற்றும் தனியார் மருத்துவமனை கட்டணம் தொடர்பாக உரிய நேரத்தில் அறிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படுகிறது. எங்கும் தாமதம் இல்லை. ரெம்டிசிவர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சியை தமிழக அரசு வெற்றிகரமாக செய்து வருகிறது. அரசு திறம்பட செயல்பட்டுவருகிறது. சித்த மருத்துவம் சார்பில் ஆர்சனிக் ஆல்பம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னையில் 253 நடமாடும் மருத்துவ குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் தொடக்க நிலையில் நோயை தொற்றை கண்டறியும் பணியை மாநகராட்சி செய்துவருகிறது. மன நல ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்போடு பல்வேறு நாடுகள் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்திவருகிறது. தமிழகத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: