அமெரிக்காவில் மீண்டும் அட்டூழியம் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை: அட்லாண்டா போலீஸ் அதிகாரி ராஜினாமா

அட்லாண்டா: அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அட்லாண்டா போலீஸ் அதிகாரி ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவின் மின்னெபோலீஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 25ம் தேதி போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கழுத்தில் கால் வைத்து மிதித்த கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி வன்முறைகளும் கலவரங்களும் வெடித்தன. கடந்த 11ம் தேதி தான் ஜார்ஜ் பிளாய்ட் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதால் எழுந்த பதற்றம் மறைவதற்குள்ளாக மற்றொரு கருப்பினத்தை சேர்ந்த இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அட்லாண்டாவில் உள்ள வெண்டிஸ் உணவு விடுதி அருகே கருப்பினத்தை சேர்ந்த ரேஷர்ட் புரூக்ஸ் (27) என்ற வாலிபர் நேற்று முன்தினம் காரில் படுத்து உறங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் ரேஷர்ட் மற்ற வாடிக்கையாளர்களின் வருகையை தடுக்கும் வகையில் காரை நிறுத்திவிட்டு உறங்குவதாக நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் விசாரணையில் ரேஷர்ட் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்வதற்கு முயற்சித்துள்ளனர். அப்போது போலீசாரின் துப்பாக்கியை அவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனையடுத்து மற்றொரு போலீஸ் அதிகாரி அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்த இந்த வீடியோ காட்சிகளை ஜார்ஜியா புலன் விசாரணை அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரி எரிக்கா ஷீல்ட் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கருப்பினத்தை சேர்ந்த வாலிபரை சுட்டுக்கொன்ற பெயர் குறிப்பிடப்படாத போலீஸ் அதிகாரியும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சம்பந்தப்பட்ட வெண்டி ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

* முதல் சம்பவத்தில்ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பின வாலிபர் போலீஸ்காரர் ஒருவரால் கழுத்தில் கால் வைத்து அழுத்தி கொல்லப்பட்டார்.

* இரண்டாவது சம்பவத்தில் நண்பர்களுக்காக காத்திருந்தவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது நடந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* இரு சம்பவங்களால் அமெரிக்காவில் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: