அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்

புதுடெல்லி: இந்தியா பலவீனமான நாடு அல்ல என்றும் அதன் பாதுகாப்பு திறன் அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஜன் சம்வத் பேரணி’ என்ற தலைப்பில் ஜம்மு காஷ்மீர் மக்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியதாவது:எந்த சூழ்நிலையிலும் தேசிய பெருமையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என நான் உறுதியளிக்கிறேன். இந்தியா இனி பலவீனமான நாடு கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கான நமது திறன் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வலிமையானது யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல. நமது நாட்டின் பாதுகாப்புக்காக தான். இந்தியாவுடான எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்ப்பதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான மோதலை தணிப்பதற்கான இந்தியாவின் முயற்சியும் இதுதான்.

பிரதமர் மோடி தலைமையில், ஜம்மு காஷ்மீர் பல உயரங்களை எட்டியுள்ளது. சிறிது காத்திருங்கள். பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலை வரும். அவர்கள் பாகிஸ்தான் ஆட்சியின் கீழ் இருக்க விரும்ப மாட்டார்கள். இது நடக்கும் நாளில் நமது நாடாளுமன்றத்தின் குறிகோளும் நிறைவேறும். முன்பெல்லாம் காஷ்மீரை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தப்படும். அப்போது பாகிஸ்தான், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகள் அங்கு பறக்கும். ஆனால் காஷ்மீரில் தற்போது இந்திய கொடியை மட்டுமே பார்க்க முடிகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: