பெருந்துறையில் சூறாவளி காற்றுக்கு மரம் விழுந்து மின்கம்பம் சேதம்: மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

பெருந்துறை: பெருந்துறை பகுதியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றுக்கு மரம் முறிந்து விழுந்து மின் கம்பம் சேதமடைந்ததால், தாய் நகர் பகுதி மக்கள் மின் விநியோகம் இன்றி தவித்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் நேற்று முன்தினம் மாலை லேசான காற்றுடன் மழை தூறல் தொடங்கியது. பின்பு திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. அரை மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு பெருந்துறை நகர் பகுதியில் ரோட்டோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. பெருந்துறை-காஞ்சிக்கோவில் ரோட்டில் தாய் நகரில் இருந்த பெரிய மரம் வேருடன் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தன.

இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு பெருந்துறை நகர் பகுதிகளில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் அன்று இரவு ஒரு சில பகுதிகளுக்கு மின்சாரம் கிடைத்தது. தாய் நகர் பகுதியில் நேற்று பகலிலும் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி நேற்று தாய் நகர் மற்றும் சுற்றுபுற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கினர். பலத்த மழையால் பல இடங்களில் சாக்கடை நிரம்பி மழைநீர் செல்ல வழியின்றி கடைகளுக்குள் புகுந்தது.

Related Stories: