சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நிர்வாக நடவடிக்கை காரணமாகவே மாற்றம், உள்நோக்கம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: நிர்வாக நடவடிக்கை காரணமாகவே சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவர் கூறியதாவது;

சென்னையில் கொரோனாவின் வீரியம் அதிகமாக உள்ளதால், மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், மூன்றையும் பின்பற்றினால் கொரோனா வராது என்றும் கூறினார். மேலும் சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த காரணமும் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னையில் கொரோனா வீரியம் அதிகரித்துள்ளதாவும், சென்னை முழுவதும் 8 லட்சம் முதியவர்கள் சிறப்பு கண்காணிப்பில் உள்ளனர் என்றும் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவு, கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. 55% அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார். குடிசை பகுதியில் வசிப்போருக்கு முக கவசம் வழங்கப்பட்டுள்ளது, முக கவசம், கிருமி நாசினி, தனி மனித இடைவெளியை கடைபிடித்தால் கொரோனா வராது என வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனோவையும் கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டும் என்ற இரண்டு விஷயங்களையும் கருதில் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: