10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு:  10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து அரசு பரிசீலனை செய்யும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தினசரி மார்க்கெட் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மார்க்கெட்டை திறந்து வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வில் இருந்து 40 சதவீதம் மதிப்பெண், அரையாண்டு தேர்வில் இருந்து 40 சதவீதம் மதிப்பெண், வருகை பதிவேட்டில் இருந்து 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களுக்கு எந்த முறையிலான தேர்ச்சி வழங்குவது என அரசு பரிசீலனை செய்யும். தமிழகத்தில் நூலகங்கள் எப்போது திறக்கப்படும்? என அரசு அறிவிக்கும். மருத்துவ படிப்பில் தமிழகத்தில் இடஒதுக்கீடு குறித்தும் விரைவில் முதல்வர் அறிவிப்பார். காலாண்டு, அரையாண்டு தேர்வில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதற்கு இப்போது பதில் அளிக்க இயலாது. குறைகள் என்னென்ன உள்ளது என ஆராய்ந்து அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: