கையேந்தி பவன் முதல் பெரிய ஓட்டல் வரை பாதிப்பு பசி போக்கும் தொழிலை பட்டினி போட்ட ஊரடங்கு

* ‘பார்சல் விற்பனை’ இழப்பை ஈடுகட்டவில்லை

* தளர்வுகள் அறிவித்தும் நெருக்கடி தீரவில்லை

தினம் தினம் ஒரே மாதிரி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு, விதவிதமான உணவு வகைகளை ருசிக்க கற்றுத்தந்தவை ஓட்டல்கள்தான். வெளிநாட்டு உணவாக இருந்தாலும், வேறு மாநில பதார்த்தமாக இருந்தாலும் அதற்கென ஸ்பெஷல் ஓட்டல்கள் இருக்கின்றன. ஆர்டர் செய்தால், ஆசைப்பட்ட உணவு வகை ருசிக்க காத்திருக்கும். அதுமட்டுமின்றி, அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப சாப்பிட கையேந்தி பவன்கள், சாதாரண, நடுத்தர ஓட்டல்கள் ஏராளம் உள்ளன. மேன்ஷன்களில் தங்கியிருப்பவர்களுக்கு இவை வரப்பிரசாதம்.  அனைத்து தரப்பினரின் தேவையை பூர்த்தி செய்யும் ஓட்டல் தொழில், அவ்வளவு சாதாரணமானதல்ல. காரணம், குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்று தீர்க்க வேண்டும். இல்லையென்றால் அத்தனையும் வீண் ஆகிவிடும். எனவே, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஓட்டல்கள் படாத பாடுபட வேண்டியிருக்கிறது. அதிலும் நடுத்தர ஓட்டல்கள் நிலை ரொம்ப மோசம். வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டும். அதிலேயே வாடகை, மின் கட்டணம், வரி உட்பட எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும். ஒரு வகையில், தினம் தினம் போராட்டம்தான்.  ஆனால், கொரோனா பரவலுக்கு பிறகு, ஓட்டல் தொழில் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஊரடங்கால் பாதிப்படைந்த ஓட்டல்களுக்கு, ஊரடங்கு தளர்வில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட, அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், கொரோனா ஊரடங்கால் இதுவரை ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவே முடியாது என்கின்றனர் ஓட்டல் தொழில் துறையினர்.

 தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் என பல மாவட்டங்களில் சுமார் 8,500 உயர்தர ஓட்டல்கள், 80 ஆயிரம் சிறிய ரக ஓட்டல்கள், கையேந்தி பவன்கள் என அழைக்கப்படும் தள்ளுவண்டி உணவகங்கள் 2 லட்சம் உள்ளன. கொரோனா ஊரடங்கால் இவை அனைத்தும் மூடப்பட்டன. இதனால், தமிழகம் முழுவதும் ஓட்டல் உரிமையாளர்களும், சுமார் 20 லட்சம் தொழிலாளர்களும் வேலையின்றி தவித்தனர். இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 60 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் ஓட்டல்கள் மூடப்பட்டு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேருக்கு உணவு சமைத்து பரிமாறிய எங்களது வீடுகளில் நாங்கள் வயிறாற சாப்பிட உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதே என ஓட்டல் ஊழியர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.  ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரியும் முத்துசாமி என்பவர் கூறுகையில், ‘‘ஊரடங்கால் பட்டினியால் தவித்தோம். குடும்ப  நிலை கண்டு, கிடைக்கும் தொழிலை செய்ய முன்வந்தோம். பல புரோட்டா மாஸ்டர்கள் ஊர்களுக்கு சென்று, ஆடு மேய்க்கும் தொழில் செய்கின்றனர். பலர் இறைச்சி கடைகளில் பணியாற்றுகின்றனர்’’ என்றார்.  தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டாலும், ஓட்டல் தொழில் முழுமையாக இயங்கவில்லை. பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் ஓட்டலுக்கு வருவதில்லை. அதனால், ஓட்டல் தொழில் சூடுபிடிக்கவில்லை. சுமார் 10-20 % மட்டுமே வியாபாரம் நடக்கிறது. ஓட்டல் தொழிலாளர்கள் (வடமாநில தொழிலாளர்கள் உள்பட) பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஓட்டல் தொழில் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்ைத எதிர்கொண்டுள்ளது.  ஊரடங்கிற்கு பிறகு, மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதனால், உணவு உற்பத்தி செலவு அதிகரித்து விட்டது. மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். அதனால், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டாலும், இந்த தொழில் இன்னும் நெருக்கடியில்தான் உள்ளது. அதில் இருந்த மீள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் ஓட்டல்கள் சங்க  நிர்வாகிகள்.

 தொழில்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிவித்த ₹20 லட்சம் கோடி திட்டமும் வெறும் அறிவிப்பாக இருந்துவிடாமல் தொழில்துறையினருக்கு உதவும் வகையில் அமைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் அவர்கள் விருப்பமாக உள்ளது. இதுபற்றி கோவை மாவட்ட ஓட்டல் அசோசியேசன் செயலாளர் சிவக்குமார் கூறுகையில், ‘‘ஓட்டல் தொழிலை சீர்படுத்த, மத்திய-மாநில அரசுகள், ஜி.எஸ்.டி. வரி விலக்கு, மின் கட்டணம் ரத்து உள்ளிட்ட சலுகை அளிக்கவேண்டும். அதேபோல், தொழிலாளர்களுக்கான பி.எப், இ.எஸ்.ஐ. திட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் ₹20 லட்சம் கோடி கடன் திட்டத்தில் எம்எஸ்எம்இ துறையில் பதிவு பெற்றவர்கள் எளிய முறையில் கடன்பெற வங்கிகள் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார்.  சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மணி கூறுகையில், ‘‘ஒவ்வொரு தள்ளுவண்டி கடைகளும் ஒரு குடும்பத்திற்கு சமம். ஊரடங்கால் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகள் மூலம் ₹20 ஆயிரம் கடன், ₹50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்றார்கள். ஆனால், எதுவும் வழங்கப்படவில்லை. வங்கி கடனுதவி எளிய முறையில் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும்’’ என்றார்.

வேலை இழப்பால் மாறியது தொழில்

ஓட்டல்களில் பணிபுரிந்து வந்த புரோட்டா மாஸ்டர்கள் உட்பட சமையல் கலைஞர்கள் பலர் வேலையிழந்து விட்டனர். இதுபோல், சர்வர்கள், பாத்திரம் தேய்ப்பவர்கள் உட்பட ஏராளமான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பறிபோய் விட்டது. இவர்களில் பலர் காய்கறி மொத்த மார்க்கெட் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகின்றனர். இன்னும் பலர், பெயிண்ட்டிங் தொழில், ஆடு மேய்க்கும் தொழிலை செய்கின்றனர் என சிறிய ஓட்டல்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: