நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கு எப்படி ஆறுதல் சொல்வேன்? : ஜெ.அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெ.அன்பழகன். இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 2ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 பிறந்த நாள் ஆகும். 1958-ல் பிறந்த ஜெ.அன்பழகன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2001-ல் முதன்முறையாக தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2011, 2016-ல் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  ஜெ.அன்பழகன் 15 ஆண்டுகளாக திமுக மாவட்ட செயலாளராக திறம்பட பணியாற்றி வந்தார்.

இவரது மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளனர்.              

           

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது !மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ அன்பழகன் -ஐ எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?, என பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: