எல்லையோ பெரிசு... கட்டிடமோ சிறுசு... குடோனில் இயங்கி வரும் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷன்

திருமங்கலம: திருமங்கலம் நகரின் எல்லையில் துவங்கி திருநகர் வரை பரந்து விரிந்த எல்லையை கொண்ட ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷன் நீண்ட நாள்களாகவே குடோனில் இயங்கி வருகிறது. திருமங்கலம் காவல்நிலைய உட்கோட்டத்திற்குட்பட்டது ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு ஓரிரு வழக்குப்பதிவு மட்டுமே செய்யப்படும் ஸ்டேஷனாக இருந்து வந்தது. மதுரை மாநகர எல்லை திருநகர் வரை விரிவுபடுத்தப்பட்ட பின்பு ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷன் மாவட்ட போலீசாரின் எல்லையில் பரபரப்பான ஸ்டேஷனாக மாறியது.

திருமங்கலம் உட்கோட்டத்தில் திருமங்கலம் நகர் ஸ்டேஷனுக்கு அடுத்தப்படியாக அதிக வழக்கு பதியப்படும்  ஸ்டேஷனாக மாறிவிட்டது. திருமங்கலம் நகராட்சி எல்லையான உச்சபட்டி, கரடிக்கல், தர்மத்துப்பட்டியில் துவங்கி திருநகர் எல்லையான விளாச்சேரி, மொட்டமலை, நிலையூர் வரை ஆஸ்டின்பட்டி எல்லைகள் பரந்து விரிந்துள்ளன. சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆஸ்டின்பட்டி ஸ்டேஷனில் அடக்கம். ஆனால் ஸ்டேஷன் அருகேயுள்ள மூனாண்டிபட்டியை தவிர்த்து மற்ற அனைத்து கிராமங்களும் குறைந்தது 4 முதல் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.

2006ல் ஆஸ்டின்பட்டி மருத்துவமனை அருகே குடோனில் போலீஸ் ஸ்டேஷன் துவக்கப்பட்டது. தற்போது வரை காட்டுப்பகுதியிலுள்ள இதே குடோனில் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. மிகவும் சிறிய கட்டிடத்தில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவர சாலை வசதி இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டாலும் ஸ்டேஷனுக்கு இதுவரை சாலை அமைக்கவில்லை. இரவில் ஆண் போலீசாரே தங்கி பணிசெய்ய அச்சம் கொள்ளும் அளவிற்கு சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக ஸ்டேஷன் உள்ளது.

அதனால் இரவு பாரா வேலைக்கு வர பெண் போலீசார் தயங்குகின்றனர். மேலும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதநிலையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். ஸ்டேஷனுக்கு வந்து செல்ல பொதுமக்களுக்கு வாகன வசதியும் இல்லை. ஸ்டேஷனுக்கு கட்டிடம் கட்ட இடம் வாங்கியும் கட்டுமான பணி  இதுவரை நடைபெறவில்லை என்கின்றனர் போலீசார்.

Related Stories: