சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகியும், மூத்த கால்பந்து வீரருமான பாலசாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை பிராட்வேயை சேர்ந்தவர் ஏ.பாலசாமி (82). கால்பந்து வீரரான அவர், மெட்ரோஸ் கால்பந்து சங்க லீக் போட்டிகளில் பிராட்வே டான் பாஸ்கோ அணிக்காக முதலில் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து பின்னி மில் அணிக்காவும், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மினர்வா ஃபுட்பால் கிளப்புக்காகவும் விளையாடியுள்ளார். பின்னர் இந்த கிளப்பின் செயலாளராகவும், மெட்ராஸ் யுனைட்டட் கிளப் (எம்யுசி) செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் கால்பந்து பிரிவு பொறுப்பாளராகவும் பாலசாமி இருந்துள்ளார்.