அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறி தேனி பெண் போலீஸ் அதிரடியாக பணிநீக்கம்: காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு

தேனி: அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறி, திருச்சி பயிற்சி மையத்தில் இருந்த தேனி மாவட்ட பெண் போலீஸை பணிநீக்கம் செய்தது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரப

ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிரேமா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்டில் நடந்த போலீஸ் தேர்வில் பிரேமா தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடிப்படைபயிற்சி அளித்து, கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு உத்தரவிடப்பட்டது.இதன்படி தேனி மாவட்டத்தில் பிரேமா உள்ளிட்ட பெண் போலீசாருக்கு கடந்த மார்சில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டு, தேனி போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் திருச்சி போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், பிரேமா ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பில், கலைமணி என்ற பெயரில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், அவர் மீது பல வழக்குகள் இருப்பதாகவும், தேனி எஸ்பி அலுவலகத்திற்கு புகார் வந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ‘மக்கள் அதிகாரம்’ நடத்திய போராட்டங்களில் கலைமணி என்ற பெயரில் பிரேமா கலந்து கொண்டதும், அவர் மீது கம்பம், குமுளி, உத்தமபாளையம் காவல் நிலையங்களில் வழக்குப்பதிந்து கைது செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பயிற்சியில் இருந்த பெண் போலீஸ் பிரேமாவை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்கான ஆணையை எஸ்ஐக்கள் மாயன் மற்றும் பாண்டியம்மாள் ஆகியோர் திருச்சி கொண்டு சென்று, அங்கு பயற்சி மையத்தில் இருந்த பிரேமாவிடம் கொடுத்தனர். பின்னர் அவரை திருச்சியில் இருந்து வேனில் அழைத்து வந்து நேற்று அதிகாலை நாராயணத்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விட்டுச் சென்றனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் அலட்சியம்

ஒருவர் போலீஸ் பணிக்கு தேர்வாகி, அவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படுவதற்கு முன், அவர் மீது வழக்குகள் உள்ளதா என ஏரியா போலீஸ், தனிப்பிரிவு போலீஸ், உளவுப்பிரிவு போலீஸ் அறிக்கை தரவேண்டும். உத்தமபாளையம் தாலுகாவில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பில் 11 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ள நிலையில், பிரேமாவை கண்டுகொள்ளாமல் விட்டது போலீசாரின் அலட்சியத்தையே காட்டுகிறது. இதற்கிடையே, பெயரை மாற்றியும், போலீஸ் வழக்குகளை மறைத்தும் பிரேமா பணியில் சேர்ந்ததால், அவர் மீது கிரிமினல் வழக்கு பதியவும் வாய்ப்புள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

பிரதமர், முதல்வருக்கு எதிராக போராடியவர்

தேனி, அல்லிநகரத்தை சேர்ந்த பிரேமா, தேனியில் பிளஸ் 2 படித்து விட்டு கல்லூரியில் சேர்ந்தார். அதை முழுமையாக முடிக்காமல் பாதியில் நிறுத்தினார். கல்வி சான்றிதழ்களில் பிரேமா என்றிருந்தாலும், குடும்பத்தினர் கலைமணி என அழைத்துள்ளனர். போடி அருகே, துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான முருகனை திருமணம் செய்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன், முருகனின் சகோதரி குடியிருந்த நாராயணத்தேவன்பட்டிக்கு குடிபெயர்ந்தார். முருகனின் குடும்பத்தினர் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பில் இருந்ததால், பிரேமாவும் அதில் சேர்ந்துள்ளார். உத்தமபாளையத்திற்கு வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிரான வாகன மறியல், பிரதமர் மோடிக்கு எதிராக கம்பத்தில் நடந்த போராட்டம், பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக குமுளியில் மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த போராட்டம் ஆகியவற்றில் பிரேமா கலந்து கொண்டுள்ளார்.

Related Stories: