சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி சித்திரை மாத லட்சார்ச்சனை மகாபிஷேகம்: இன்று மாலை சிறப்பு ஹோமம் தொடக்கம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜ பெருமானுக்கு லட்சார்ச்சனை மற்றும் மகாபிஷேகம் மே 1-ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை கூஷ்மாண்ட ஹோமம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜா கோயிலில் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். அதேபோல் ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு விழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் மே 1-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. உற்சவமூர்த்திக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, விபூதி, தேன், சந்தனம் புஷ்பம் உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும். அதிருத்ர மகா ஜபத்தை முன்னிட்டு இன்று (ஏப். 28) கூஷ்மாண்ட ஹோமம், நடராஜர் அனுக்ஞை நடைபெறு கின்றன. அதனை அடுத்து திங்கள்கிழமை (ஏப். 29) அஷ்டதிரவிய மகாகணபதி ஹோமமும், ஏப்.30 நவகிரக ஹோமமும், தனபூஜை, ரட்சாபந்தனமும் நடைபெறுகின்றன.

மே 1-ஆம் தேதி காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு லட்சார்ச்சனை, பின்னர் யாகசாலையில் கடஸ்தாபனம் செய்யப்பட்டு அர்ச்சனை மற்றும் அதிருத்ரஜப பாராயணம் நடைபெறுகின்றன. பிற்பகல் மகா ருத்ர ஹோமம் தொடங்கி வஸோத்தாரா ஹோமம், மகாபூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெறுகின்றன. மாலை வடுக, கன்யா, சுகாசினி, தம்பதி, கோ, கஜ பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் தீபாராதனை வேதபாராணயம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

அதனைதொடர்ந்து, யாகசாலையிலிருந்து கலசம் புறப்பட்டு கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு ருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி சித்திரை மாத லட்சார்ச்சனை மகாபிஷேகம்: இன்று மாலை சிறப்பு ஹோமம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: