10ம் வகுப்பு தேர்வுக்காக சென்னையிலிருந்து கொடைக்கானல் வந்த மாணவிக்கு கொரோனா

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, இங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயின் பெற்றோர் சென்னையில் உள்ளனர். உடல்நலம் சரியில்லாத அவர்களைப் பார்க்க தாயுடன் சிறுமி சென்னை சென்றுள்ளார். 40 நாட்களுக்கும் மேலாக சென்னையில் இருந்த சிறுமி, ஜூன் 15ம் தேதி துவங்கவுள்ள 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக நேற்று முன்தினம் இரவு கொடைக்கானலுக்கு தாயுடன் காரில் வந்தார். வழியில் வடமதுரை அருகே இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுமிக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொடைக்கானல் சுகாதாரத்துறையினர் உடனடியாக அந்த சிறுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர்கள் வந்த கார் டிரைவர், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டனர். காரும் சீல் வைக்கப்பட்டது.மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு தேர்வு எழுத வந்த 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல் பாதிப்பு: கொடைக்கானலில் ஊரடங்கு அறிவிப்பிற்கு பின் சுற்றுலாப்பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. தற்போது 10ம் வகுப்பு மாணவி மூலம் கொடைக்கானலில் முதல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: