ரேஷன் அரிசியில் தரமில்லை எனக்கூறி அமைச்சர் செல்லூர் ராஜூவை மதுரையில் பெண்கள் முற்றுகை: டூவீலரில் சென்று ஆய்வு; ஊழியர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை, பெத்தானியாபுரம், அண்ணா மெயின் வீதியில், நேற்று அதிமுக சார்பில், பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை வழங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காரில் வந்தார். பின்னர் இறங்கி நடந்து வந்தபோது,  ஒரு இளம்பெண் இலவச அரிசி பையை, அவருக்கு முன்பு வைத்து விட்டு, ‘‘ரேஷன் கடையில், வழங்கப்படும் அரிசி கருப்பாக இருக்கிறது. பாதிக்குப்பாதிதான் எடையும் இருக்கிறது’’ என முறையிட்டார். உடனே அங்கிருந்த மற்ற பெண்களும், ரேஷன் அரிசி துர்நாற்றம் வீசுவதாக கூறி அமைச்சரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடனே அந்த ரேஷன் கடைக்கு புகார் கூறிய பெண்ணை வரும்படி கூறிவிட்டு, அதிமுக தொண்டரின் டூவீலரில் அமைச்சர் செல்லூர் ராஜூ கிளம்பி சென்றார்.

பெண் கூறிய கடையில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு மூட்டைகளில் இருந்த கருப்பு நிற அரிசியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அரிசியை எடை போட்டபோது, 20 கிலோவுக்கு வெறும் 9 கிலோ மட்டுமே இருந்தது. உடனே அருகில் இருந்த அதிகாரிகளை அழைத்து, எடையாளர் தர்மேந்திரனை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். ரேஷன் கடையில் வேலை பார்க்கும் ஒருவரின் உறவினரும் கடையில் இருந்தார். அமைச்சரின் உத்தரவின்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஏற்கனவே வழங்கிய அரிசியை மாற்றி நல்ல அரிசியை வழங்கும்படி கூறி விட்டு கிளம்பிச் சென்றார்.

Related Stories: