மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி 70,000 மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மின்சார தொழிலாளர் மற்றும் பொறியாளர் கூட்டமைப்பின் தமிழக பிரிவு தொழிற்சங்கங்கள் மற்றும் மின்வாரியத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டு கூட்டம் கடந்த மே 21ம் தேதி நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜூன் 1 தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டு குழு சார்பாக பிரிவு அலுவலகங்களில் பணிக்கு செல்வதற்கு முன்பாகவும், அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளை அல்லது சாத்தியமான நேரங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டன முழக்கமிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

Advertising
Advertising

அதன்படி, நேற்று ஊழியர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச, மின்ஊழியர் மத்திய அமைப்பு,  ஜஎன்டியுசி, பொறியாளர் சங்கம்,  மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர்  ஐக்கிய சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், மின்வாரிய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டு, கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 70,000 மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: