சூலூரில் திருடு போன பைக் கூரியரில் திரும்பி வந்த அதிசயம்

சூலூர்: சூலூரில் திருடு போன பைக் கூரியரில் வந்த சம்பவம் உரிமையாளருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). இவர், அதே பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது பைக்கை ஒர்க்‌ஷாப் முன்பு நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பைக் திருடு போனது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பைக் காணாமல் போன இடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மாயமான பைக்கை வாலிபர் ஒருவர் ஓட்டி சென்றது பதிவாகியிருந்தது.

 பைக்கை திருடி சென்றவர் குறித்து விசாரிக்கையில் அந்த நபர் அப்பகுதியில் பணியாற்றும் டீ மாஸ்டர் என தெரியவந்தது. ஆனால், அவர் மாயமானதால், அவரை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் சூலூர் கூரியர் அலுவலகத்தில் இருந்து சுரேஷ் குமாருக்கு, கூரியர் வந்துள்ளதாக கூறி அழைத்துள்ளனர். சுரேஷ் கூரியர் அலுவலகம் சென்று பார்த்தபோது, பார்சலில் பைக் ஒன்று வந்துள்ளது. அது திருடு போன அவரது பைக் என்பதும் உறுதியானது. மன்னார்குடியில் இருந்து பைக் வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த சுரேஷ் உரிய கட்டணத்தைச் செலுத்தி தனது பைக்கை எடுத்து வந்தார். திருடிய பைக்குடன் டீ மாஸ்டர் சிசிடிவியில் சிக்கியது அவருக்கு தெரியவந்ததால், போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று, பைக்கை அவர் கூரியரில் அனுப்பி வைத்தது தெரியவந்தது. இருப்பினும், போலீசார், தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: