திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்; 3 மணி நேரத்தில் மீட்பு: தோழி என ஏமாற்றிய பெண் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டனர். தோழி என ஏமாற்றி தூக்கிச்சென்ற பெண் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மொசலிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ஷெரீப் மனைவி ரேசினா சுல்தானா. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 29ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய், சேய் வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அந்த வார்டுக்கு, பர்தா அணிந்து வந்த பெண், ரேசினா சுல்தானாவிடம் நான் உன்னுடன் பள்ளியில் படித்த தோழி என்று பேச்சு கொடுத்து பழகியுள்ளார். முகத்தை காட்டும்படி கூறியதற்கு, இங்கு துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி மறுத்துள்ளார். சிறிது நேரம் பேசிப்பழகிய பின்னர், ‘எனது அக்காளுக்கும் இங்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, உன் குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன்’ என்று கூறி குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த ரேசினா கூச்சலிட்டார். கணவர், உறவினர்கள் வந்து தேடியும் அந்த மர்ம பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

தகவலறிந்த எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி தங்கவேல் மற்றும் போலீசார் வந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக அனைத்து சோதனைச்சாவடிகளிலும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், குழந்தையை கடத்திய பெண் திருப்பத்தூர் தேவாங்கர் தெருவில் இருப்பதாக எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் நாஷினா என்ற பெண்ணை மடக்கினர். அவர் குழந்தையை எடுத்து வரவில்லை என்று மறுத்துள்ளார்.

ஆனால் குழந்தை அழும் சத்தம் கேட்டு போலீசார் தீவிரமாக சோதனை செய்தபோது ஒரு மூலையில் பழைய துணியில் போட்டு மறைத்திருந்ததால் மூச்சு திணறியபடி குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் இருந்த பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டு 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்ததற்காக எஸ்பிக்கும், போலீசாருக்கும் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதுகுறித்து எஸ்பி விஜயகுமார் கூறுகையில், ‘குழந்தையை கடத்திய பெண்ணிற்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளது. அந்த பெண்ணை கைது செய்து, குழந்தையை கடத்த என்ன காரணம் என்று விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: