2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...!

வாஷிங்டன்: ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா ஆகிய நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளில் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற ஜூன் 10 முதல் 12 வரை அமெரிக்காவில் நடைபெற இருந்தது.

Advertising
Advertising

கொரோனாவால் திட்டமிட்டபடி மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, ஊரடங்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என  டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு வாஷிங்டன் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இயலாது என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்  கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, இந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநாடு நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு  ஒத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு;

கடந்த 2019-ம் ஆண்டு ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வேண்டுமென்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அன்புக்கு மரியாதை அளிக்கும் வகையில்  அழைப்பை நமது பிரதமர் ஏற்றுக் கொண்டு, கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: