டெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்

புதுடெல்லி: மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். முழு உடல்தகுதியுடன் அதற்கு தயாராக இருக்கிறேன் என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்தார். 2013ல்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான புவனேஷ்வர், கடைசியாக 2018  ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 63 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை 21டெஸ்ட்டில் 63 விக்கெட் சாய்த்துள்ளார்.

லார்ட்ஸில் 2014ல் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட் எடுத்தார்.  அந்த போட்டியில், குக் தலைமையிலான அணியை  இந்தியா 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புவனேஷ்வர் 4 முறை தலா 5 விக்கெட்டு வீழ்த்தியுள்ளார். ஆனாலும் அவர் டி20, ஒருநாள் என்று குறிப்பிட்ட ஓவர் போட்டிகளில் தான் அதிகம் விளையாடி வருகிறார்.  ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 போட்டியில் பங்கேற்க இப்போது தயாராகி வந்தார்.

முன்னதாக இடுப்பில் ஏற்பட்ட காயம், குடலிறக்கம் காரணமாக நியூசி. சுற்றுப்பயணத்தில் அவரால் இடம் பெற முடியாத  சூழல் ஏற்பட்டது. இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்,  பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று வந்தார். அதன்மூலம் உடல்திறனை மேம்படுத்தி உள்ள புவனேஷ்வர் கூறியதாவது: நான் இப்பொழுது முழுமையாக  குணமடைந்து இருக்கிறேன். உலக கோப்பையில் விளையாட தேர்வு பெற வேண்டும் என்பது குறித்து நான்  யோசிக்கவில்லை. இப்போது எல்லோரும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம்.

ஆனால் டெஸ்ட் அணிக்கு திரும்புவது அத்தனை எளிதாக இருக்காது என்று நினைக்கிறேன். இப்போது எல்லோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனாலும் அதற்காக முயற்சி செய்வேன். என் முழு திறனையும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்காக வெளிப்படுத்துவேன். டெஸ்ட் போட்டிதான் மிகவும் கடினமானது. ஆனால் அதே நேரத்தில் முழு திருப்தியை அளிக்கக்கூடியது. இவ்வாறு புவனேஷ்வர் கூறியுள்ளார்.

Related Stories: