பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு,..வல்லுநர் குழுவில் மேலும் 4 பேர் சேர்ப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் மேலும் 4 பேரை இணைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை நடத்துவது குறித்தும், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்தும் வரும் பிரச்னைகளை ஆய்வு செய்வது அவற்றுக்கு தீர்வு காண்பதற்கும் ஒரு வல்லுநர் குழுவை பள்ளிக் கல்வித்துறை கடந்த 12ம் தேதி அறிவித்தது. இதன் தலைவராக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் இருப்பார், பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட இன்னும் சில இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டும் கற்றல் சார்ந்த பிரச்னைகளை இந்த குழு ஆய்வு செய்து வருகிறது.

ஆனால் தனியார் பள்ளிபிரச்னைகளுக்கு உரிய தீர்வு கண்டு அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பாக தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த நான்கு பேரை சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி  இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 4 பேரை மேற்கண்ட வல்லுநர் குழுவில் சேர்த்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னை அண்ணா நகர், அஜீத் பிரசாத் ஜெயின், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வேலுமணி, திருப்பூர் மனோகரன், சென்னை சுந்தரபரிபூரணன் பட்சிராஜன் ஆகியோரை கூடுதல் உறுப்பினர்களாக நியமித்துள்ளது. இதையடுத்து, மேற்கண்ட வல்லுநர் குழு தனது பரிந்துரையை சமர்ப்பிக்க மேலும் ஒரு வாரம் கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: