உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்

சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தி. நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் நேற்றுடன் அவரது வேலை நாட்கள் முடிந்து விட்டது. இதனால், உளவுத்துறை பதவியைப் பிடிக்க கடந்த 2 மாதமாகவே பல்வேறு அதிகாரிகள் கடுமையாக முயற்சி செய்து வந்தனர். உளவுத்துறையில் இருக்கும் அதிகாரிகள் நேரடியாக, முதல்வரிடம் பேசலாம். தமிழக அரசும் தங்களுக்கு வேண்டிய பணிகளை உளவுத்துறை மூலமாகவே செய்து கொள்ளும். இதனால் இந்தப் பதவியைப் பிடிக்க கடுமையான போட்டி இருந்து வந்தது. இந்தநிலையில், உளவுத்துறை ஐஜியாக தற்போது மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரும், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருபவருமான ஈஸ்வரமூர்த்தியை நியமித்து, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

அவர் உளவுத்துறை ஏடிஜிபி பதவியையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசு கூறியுள்ளது. ஈஸ்வரமூர்த்தி, இதற்கு முன்னர், டிஎஸ்பியாக உளவுத்துறையில் பணியாற்றினார். பின்னர், உளவுத்துறை எஸ்பி(சிறப்பு பிரிவு), லஞ்ச ஒழிப்புத்துறை(மேற்கு மண்டலம்), மீண்டும் உளவுத்துறை எஸ்பி, சென்னை மாநகர உளவுத்துறை துணை கமிஷனர், மீண்டும் உளவுத்துறை சிறப்பு பிரிவு எஸ்பி பின்னர் அயல் பணியாக சிபிஐ எஸ்பியாக பணியாற்றினார். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று, சிபிஐயில் பணியாற்றினார். பிறகு மாநிலப் பணிக்கு திரும்பியதும் உள்நாட்டு பிரிவு உளவுத்துறை ஐஜியாக இருந்தார். பின்னர் சென்னை மாநகர மத்தியக்குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுவார் என்ற பெயர் எடுத்தவர்.

இதற்கிடையில், தமிழகத்தில் மனித உரிமை ஆணைய டிஜிபி ஸ்ரீலட்சுமி பிரசாத், தொழில் நுட்பப் பிரிவு ஏடிஜிபி கே.சி.மகாளி, காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி சேஷசாயி ஆகியோரும் நேற்றுடன் ஓய்வு பெற்றனர். அதில், ஏடிஜிபிக்களாக இருந்த ஷகீல் அக்தர், கந்தசாமி, ராஜேஸ்தாஸ், கே.சி.மகாளி ஆகியோருக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதனால் தமிழக அரசு இவர்கள் 4 பேருக்கும் நேற்று பதவி உயர்வு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் 4 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இதனால் கே.சி.மகாளி, டிஜிபி பதவி உயர்வு கிடைக்காமல் ஏடிஜிபி அந்தஸ்தில் ஓய்வு பெற்றார்.

Related Stories: