சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழு பேட்டி

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர்; மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ளது. சோதனைகளை அதிகப்படுத்துவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்படுத்த தேவையில்லை.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னையில் சமூக பரவல் இல்லை. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறியிருந்தால் உயிரிழப்புகள் அதிகமாகி இருக்கும் சென்னையில் பொதுப்போக்குவரத்தை தளர்த்தினால் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்களை அதிக கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் மொத்த பாதிப்பில் 70% பாதிப்பு 30 மாவட்டங்கள் தான். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். முகக்கவசம் அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்புவதை தவிர்க்க வேண்டும்; பயத்தை கிளப்ப வேண்டாம். இது ஒரு புதிய வைரஸ்; அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். பாதிப்பு அதிகமாக அதிகமாக கொரோனா வார்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேவையை பொறுத்து கூடுதல் தளர்வுகளை அளிக்கலாம் என கூறியுள்ளனர்.

Related Stories: