எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விசாரணைக்காக அழைத்து செல்லப்படும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசியல் பழிவாங்கும் நோக்கோடும், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவரைக் சட்டத்திற்குப் புறம்பாக ரிமாண்ட் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக மனுவில் திமுக குற்றம்சாட்டி இருந்தது. ந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

நாளை சட்டமன்றம் கூட உள்ளதால் அதில் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதியின் பங்களிப்பு மிகவும் அவசியமான ஒன்று என திமுக தரப்பு வாதிட்டது. அப்போது உதயநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை என்று அரசுத்தரப்பு கூறியது. விசாரணைக்காக மட்டுமே உதயநிதி தஞ்சைக்கு அழைத்து செல்லப்படுவதாகவும், விசாரணை முடிந்த பின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கபடுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே அவரை விடுவிக்க வேண்டும். விசாரணைக்குப் பின் காவல்நிலைய ஜாமீனில் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதே நேரம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்க நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டு உள்ளது. இறுதியாக அரசு வழக்கறிஞரின் வாக்குறுதியை ஏற்று வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி இளந்திரையன்

Related Stories: