ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: விநாடிக்கு 2500 கனஅடியானது

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2500 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிந்தது. கடந்த 23ம் தேதி 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, 26ம் தேதி 2 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் 1500 கனஅடியாகவும் சரிந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து ஒகேனக்கல்லுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் படிப்படியாக அதிகரித்த நீர்வரத்து, நேற்று காலை 10 மணி நிலவரப்படி தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு 2500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி செந்நிறத்தில் பாய்ந்தோடி செல்கிறது. .

அதேநேரத்தில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் விநாடிக்கு 2190 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 2119 கனஅடியானது. அணையின் நீர்மட்டம் 100.73 அடியாகவும், நீர் இருப்பு 65.79 டிஎம்சியாகவும் இருந்தது. இதற்கிடையே வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான ஏற்பாடுகளில், பொதுப்பணித்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: