இடி, மின்னலுடன் மழை: கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்

திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் இடி, மின்னலுடன் நேற்று பெய்த மழையால் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி நிறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை நடந்த ஐந்து கட்ட அகழாய்வில் உறைகிணறு, பாசன கால்வாய், தாயக்கட்டை, அரசு முத்திரை, சூதுபவளம் உள்ளிட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வில் இவை 2,600 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என தெரிந்தது. இவற்றை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து 6ம் கட்ட அகழாய்வு பிப்ரவரி 19ல் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் தொடங்கியது.

Advertising
Advertising

ஒரு மாதம் நடந்த அகழாய்வில் கருப்பு சிவப்பு வண்ண பானைகள், பானை ஓடுகள், செங்கல் கட்டுமானம், முதுமக்கள் தாழி உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. கொராேனோ வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24ல் அகழாய்வு நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் மே 20ல் மீண்டும் அகழாய்வு பணி துவங்கியது. இந்நிலையில் திருப்புவனம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இன்று காலை வரை 108.4 மி.மீ. மழை பதிவானது. கொட்டி தீர்த்த மழையால் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் பகுதியிலுள்ள அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

இதனால் இன்று அகழாய்வு பணி நிறுத்தப்பட்டது. பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். குழிகளில் தண்ணீர் வற்றியவுடன் மீண்டும் பணி துவங்கும் என தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: