கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் வீட்டை விற்று கூட கொடுப்பேன்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: ‘‘என் வீட்டை விற்று கூட, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து கொண்டே இருப்பேன்’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதை, அவரது ஆதரவாளர்கள் பெரிய போஸ்டர்களாக அடித்து, ஒட்டியுள்ளனர். இது மதுரை நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் அனைத்து கட்சிகள் சார்பிலும், சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 27ம் தேதி மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கினார்.

Advertising
Advertising

அப்போது அவர் பேசுகையில், ‘‘மதுரை மக்களுக்காக எனது வீட்டை விற்று கூட கொடுத்து கொண்டே இருப்பேன். கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருப்பேன். சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும். நான் மதுரைக்காரன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார். அமைச்சரின் இந்த பேச்சை அவரது ஆதரவாளர்கள் பெரிய போஸ்டர்களாக அடித்து, நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். மேலும் இந்த போஸ்டர் மற்றும் அவரது பேச்சு, வாட்ஸப்பிலும் பரவி வருகிறது. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: