தேனி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை: சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து:

தேனி/சின்னமனூர்/வருசநாடு: தேனி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை வெளுத்துக் கட்டியது. மேகமலை வனப்பகுதியில் பெய்த சாரல் மழையால், சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனியில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி தேனி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள்முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பகல் நேரத்தில் வெளியே வரமுடியாத அளவிற்கு வெயில் கடுமையாக இருந்தது. கொரோனா ஊரடங்கு மற்றும் நிபந்தனைகள் தளர்வு காரணமாக சராசரியாக மக்கள் நடமாட்டம் இருந்தாலும், பகல்நேரத்தில் பொருள்கள் வாங்க வருவோரின் கூட்டம் குறைவாக இருந்தது. இந்நிலையில், தேனி நகரில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதனால் இதமான காலநிலை நிலவியது. மாலையில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. நகரின் முக்கிய பகுதியான நேருசிலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை,மதுரை சாலையில் மழை நீர் தேங்கியது. இதேபோல ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளைம்,, கடமலைக்குண்டு என மாவட்டம் முழுவதும் கனமழை பரவலாக பெய்தது.

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் வானம் இருண்டு கருமேகங்கள் திரண்டன. பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். போடியில் சூறைக்காற்றுடன் மழை: போடியில் நேற்று மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சூறைக்காற்றுக்கு வீடுகளின் தகரங்கள் பறந்தன. தேவர் காலனி, சுப்புராஜ் நகர் புதுகாலனி, புதூர் பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடுகளின் கூரையில் உள்ள தகரங்கள் சூறைக்காற்றுக்கு பறந்தன. வீடுகளில் உள்ள ஆண்டனாக்களும் சேதமடைந்தன. ஒரு மணி நேர மழையில் பூமி குளிர்ந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து

கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியம், மேகமலை வனப்பகுதியில் சில தினங்களாக சாரல்மழை பெய்து வருகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி, மதுரை புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கால் அருவிக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. அருவியைச் சுற்றிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் அப்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மேகமலை வனப்பகுதியில் சாரல் பெய்து வருகிறது. இதனால், அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கோம்பைத்தொழு ஒன்றியக் கவுன்சிலர் முருகன் கூறுகையில், ‘சின்னச்சுருளி அருவியில் வனத்துறை சார்பில் பராமரிப்பு பணி நடந்து வந்தது. அப்பணி கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. மேகமலை ஊராட்சியில் அனைத்து கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக சின்னசுருளி அருவி திகழ்கிறது. வனத்துறை சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கி, தேனி மாவட்டத்தில் முதன்மை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்’ என்றார்.

Related Stories: