கொரோனா ஊரடங்கு எதிரொலி வீடியோகாலில் வாழ்த்து கூறி மொய் பணம் அனுப்பும் நவீன திருமண அழைப்பிதழ்: திருப்பத்தூரை சேர்ந்த அச்சக தொழிலாளியின் புதிய முயற்சி

திருப்பத்தூர்: கொரோனா ஊரடங்கு எதிரொலியாக திருப்பத்தூரை சேர்ந்த அச்சக தொழிலாளி மணமக்களுக்கு வீடியோ காலில் வாழ்த்து கூறி மொய் பணம் அனுப்பும் விதமாக நவீன திருமண அழைப்பிதழை உருவாக்கி உள்ளார். கொரேனா ஊரடங்கு உத்தரவால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. பொதுமக்கள் வெளியில் வராமல் தவித்து வரும் சூழலில்‌ திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் உள்ளது. தற்போது திருமணத்தில் 50 பேர் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அதனால், வீடுகளிலேயே ஏராளமானோர் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அச்சக தொழிலாளி ஒருவர் நவீன முறையிலான அழைப்பிதழ்களை தயாரித்துள்ளார். இந்த திருமண அழைப்பிதழ்களில் கியூ ஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. இதில், திருமணத்திற்கு செல்போனில் வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்து ‘கூகுள் பே’ என்ற இணையதளத்தில் மொய் பணத்தை அவர்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பும் அளவில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சகத் தொழிலாளர் சங்கர் கூறியதாவது:  புதிய தொழில்நுட்ப முறையில் நாங்கள் முதன்முறையாக நவீன அழைப்பிதழ்களை தயார் செய்துள்ளோம். அதில், திருமண அழைப்பிதழ் முன்பக்கம் கியூஆர் கோடு அச்சிடப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு வர இயலாதவர்கள் அந்த அழைப்பிதழின் முக்கிய பக்கத்தை அவர்களது செல்போனில் உள்ள ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தால் மணமக்களுக்கு நேரடியாக வீடியோ கான்பரன்சில் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

அதேபோல், கியூஆர் கோட் மூலமாக ‘கூகுள் பே’ ஆப் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மொய் பணம் அனுப்பலாம். மேலும், அழைப்பிதழ்களில் அச்சடிக்கப்பட்ட வாட்ஸ்அப்  எண்ணை தொடர்பு கொண்டால் மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறினார். இந்த நவீன அழைப்பிதழ்கள் திருப்பத்தூர் கலெக்டர் சிவன்அருள், எஸ்பி விஜயகுமார் ஆகிய இருவரிடமும் வழங்கப்பட்டது. அவர்கள், சங்கரை பாராட்டினர்.

Related Stories: