விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் நிதியுதவி

புதுடெல்லி : கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள விளையாட்டு வீரர்கள் 2749பேருக்கு மத்திய அரசு தலா 30 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது.  மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் தேர்வாகி உள்ள  2893 வீரர்களில் 2749 வீரர்களுக்கு முதலாவது காலாண்டுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வீரருக்கும் தலா 30 ஆயிரம் என 8.25 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.எஞ்சியுள்ள 144 வீரர்களுக்கு இம்மாத இறுதிக்குள் உதவித் தொகை வழங்கப்படும் என்று சாய் தெரிவித்துள்ளது.  சொந்த ஊர் செல்ல, வீட்டில் சத்தான உணவு சாப்பிட மற்றும் இதர செலவினங்களுக்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக சாய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   

Advertising
Advertising

கேலோ இந்தியா  திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓராண்டு  உதவித் தொகையான 1.2 லட்சம் ரூபாயில் முதலாவது காலாண்டுக்கான 30 ஆயிரம் ரூபாய் இப்போது வழங்கப்பட்டுள்ளது. 21 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 386, ஹரியானா 381, டெல்லி 225, பஞ்சாப் 202 மற்றும் தமிழகத்தை சேர்ந்த 165 பேர் பலன் அடைந்துள்ளனர்.

Related Stories: