சீனாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களை அவ்வளவு சுலபமாக இழுக்க முடியாது இந்தியா ரொம்பவே மெனக்கெடணும்: மத்திய அரசுக்கு நிபுணர்கள் அட்வைஸ்

புதுடெல்லி: உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் சீனாதான் காரணம் என்பதால், அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளுமே கடும் கோபத்தில் உள்ளன. சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற துடிக்கின்றன. இதனால் இந்தியாவில் முதலீடு மற்றும் உற்பத்திக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களை சீனாவில் இருந்து அவ்வளவு சுலபமாக இழுத்து விட முடியாது என நிபுணர்கள் மற்றும் இந்திய தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: கொரோனா பரவலுக்கு பிறகு, சீனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியா சிறந்த மாற்று இடமாக தோன்றியுள்ளது. இருந்தாலும், அதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியா வர விரும்புவதற்கு ஏற்ப, சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும். அதிக வரிச்சலுகைகளை வழங்க வேண்டி வரும். இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய இங்கு ஆட்கள் கிடைப்பார்கள். எளிதாக தொழில் தொடங்குவதில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என அரசு கூறுகிறது இதுமட்டுமே போதுமானதல்ல. நிறுவன ஒப்பந்த வழக்குகளில் தீர்வு காண்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, குறைந்த செலவில், குறுகிய கால அளவில் வழக்குகளுக்கு தீர்வு காண, சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கலாம். நிறைய மாற்றங்கள் செய்தால்தான், நிறுவனங்களை, குறிப்பாக, உற்பத்தி  துறையினரை இந்தியாவை நோக்கி கவர்ந்திழுக்க முடியும் என்றனர்.

தங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்பவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிறுவனங்கள், அதில் ஏற்படும் தொழில் தகராறுகளை தீர்க்க நீதிமன்றங்களை நாடுகின்றன. இந்தியாவில் இத்தகைய தாவாக்களுக்கு தீர்வு காண சராசரியாக 4 ஆண்டு ஆகிறது என்கிறது உலக வங்கி. இந்த தர வரிசையில், இந்தியா 163வது இடத்தில் உள்ளது என்கிறது உலக வங்கி. இதுபோல், சொத்துக்களை பதிவு செய்வது தொடர்பான தர வரிசையில் 154வது இடத்தில் உள்ளது என, எளிதாக தொழில் தொடங்கும் நாடுகள் 2020 பட்டியலில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: