பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை

மதுரை:  பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  மதுரை, வில்லாபுரம் குடியிருப்பைச் சேர்ந்த சாகுல் ஹமீது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வழிபாட்டுத்தலங்களும் அடைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் தினந்தோறும் நோன்பு நோற்று ஐந்து நேரத்தொழுகைகள் உள்ளிட்ட சிறப்பு தொழுகைகளை தற்போதைய சூழலில் வீட்டிலேயே நடத்தி வருகின்றனர். வரும் 25ம் தேதி (திங்கள் கிழமை) இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டியுள்ளது. இந்த தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் நடத்துவது கடமை. எனவே, அன்றைய தினம் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையாக சமூக விலகலை பின்பற்றி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories: