சட்டீஸ்கரில் ராஜிவ் பெயரில் புதிய விவசாய திட்டம் துவக்கம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 29வது நினைவு நாளையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சட்டீஸ்கர் விவசாயிகளுக்கான நலத்திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். `ராஜிவ் காந்தி கிசான் நியாய் யோஜ்னா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்து சோனியா காந்தி பேசுகையில், ‘‘அடிமட்ட மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் அவர்களது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த திட்டத்தை தொடங்கி வைப்பது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்’’ என்றார்.

சட்டீஸ்கர் அரசு தொடங்கியுள்ள இந்த திட்டத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பாராட்டியுள்ளார். `கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடெங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழைகள் மற்றும் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் பாராட்டுக்குரியது’ என குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: